Wednesday, December 9, 2009

எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும் இணை வைத்தலைத் தவிர

இவ்வுலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! சந்தர்ப்ப சூழ் நிலையாலும், ஷைத்தானின் தூண்டுதலாலும், அலை பாயும் மனதாலும், அறியாமையாலும், அநேக பாவங்களைச் செய்து விடுவது அனைவருக்கும் இயல்பு.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மக்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! அவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடக் கூடியவர். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்:திர்மிதி)

உலகில் பிறந்த அனைவருமே பாவம் செய்யக் கூடியவர்கள் தான் என்பதை மேற்கண்ட நபி மொழியின் மூலம் அறியலாம்.

மனிதர்கள் தாம் செய்து விட்ட பாவங்களை உணர்ந்து திருந்தி, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான். இதை திரு மறை குர்ஆனின் ஏராளமான திரு வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு (மறைத்தவற்றைத்) தெளிவு படுத்தியதைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 2:160)

அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு அதன் பின்னர் மன்னிப்புக் கோரி திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக் குர்ஆன் 16:119)


திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்து பின்னர் நேர்வழி பெற்றவரை நான் மன்னிப்பேன். (திருக் குர்ஆன் 20:82)

இன்னும் எண்ணற்ற வசனங்களில், தன் அடியார்கள் செய்யும் பாவங்களை மன்னிப்பதாகக் கூறும் மாபெரும் கருனையாளனாகிய அல்லாஹ்,
ஒரேயொரு பாவத்தை மட்டும் 'மன்னிக்கவே மாட்டேன்' என்று மிகவும் கண்டிப்புடன் கூறுகிறான். மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவம் தான், ஷிர்க் என்னும் இணை வைத்தல் ஆகும்.

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (திருக் குர்ஆன் 4:48)

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) வெகு தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார். (திருக்குர்ஆன் 4:116)

இணை வைத்தல் என்னும் பாவத்தை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறும் அல்லாஹ் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தெளிவாகக் கூறுகிறான். அல்லாஹ்வின் மன்னிப்பு இல்லை என்றாகி விட்ட பிறகு இணை வைத்தல் என்னும் பாவத்தை செய்தவருக்கு ஏற்படவிருக்கும் கதி என்ன? என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?


S.Gulam Thasthageer