Tuesday, August 10, 2010

முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...

முஹம்மது நபி(ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்.

கருணை நபி என்று சொல்லப்படும் அளவுக்கு, முஹம்மது நபி (ஸல்) அவர்கள்,இந்த உம்மத்தினர் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.தன்னுடைய வாழ்நாளில், பற்பல துன்பங்களை அடைந்த போதும், நபி அவர்கள் ஒரு சில சந்தர்ப்பத்தை தவிர்த்து, பிறரை சபித்ததே இல்லை.

தாயிப் நகரத்து மக்களுக்கு, இஸ்லாத்தை எடுத்தியம்புவதற்காக சென்றபோது,சொல்லொனா துயரங்களுக்கு உட்படுத்தப்பட்டு, சிறுவர்களை ஏவி கல்லால் அடிக்கப்பட்டு, துரத்தப்பட்டு, தாயிஃபை அடுத்து ஒரு தோட்டத்திலே, உடல் எல்லாம் இரத்தம் வழிந்தேட அம்ர்ந்திருக்கும்போது, இறைவனின் கட்டளையின் பேரில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் நபி (ஸல்) அவர்கள் முன் தோன்றி, மிகப்பெரிய இரண்டு மலைகளையும் ஒன்றாக இணைத்து, இந்த மக்களை அதிலே நசுக்கிவிடவா என்று கேட்டார்கள். அப்போதுகூட மாநபி அவர்கள், வேண்டாம் இவர்கள் இல்லை என்றாலும் இவர்களின் சந்ததியினர் ஓரிறைவனை வணங்கக்

கூடியவர்களாக் வருவார்கள் என்று சொல்லி, தாயிஃப் நகர மக்களின் மீது கருனையை பொழிந்தார்கள்.

பத்ருப்போரில் பிடிபட்ட போர்க்கைதிகளை, உயிரோடு விடக்கூடாது என்று உமர் (ரலி) அவர்கள் உட்பட சொன்னபோது, (உமர் ரலி) அவர்களின் கருத்துக்கு ஏற்ப பிறகு குர் ஆன் வசனம் இறங்கியது) ஒவ்வொரு கைதியும் பத்து சிறுவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவர்கள் மீது கருணை பொழிந்தார்கள்.

மக்கத்து வெற்றியின்போது, தன்னை இந்த மண்ணில் இருந்து விரட்டியடித்தவர்களை, இன்று உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை, அபூ ஸுஃப்யானின் வீட்டில் தஞ்சம் அடைந்தவர்களுக்கும் பாதுகாப்பு என்று அவர்கள் மீது கருணை பொழிந்தார்களே தவிர அவர்களை சபிக்கவில்லை.

இப்படியாக இந்த உம்மத்தினர்மீது கருணையை பொழிந்த நபி (ஸல்) அவர்கள்,ஒரு சில சந்தர்ப்பங்களில், ஒரு சிலரை சபித்துள்ளார்கள். அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் தான் ரமழானை அடைந்து பாவ மன்னிப்பு பெறாதவர். ரமழான் மாதம் பாவ மன்னிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை கீழ்கண்ட ஹதீஸின் மூலம அறிந்து கொள்ள முடிகிறது.

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறுவதாவது: ஒருமுறை ரஸூல் (ஸல்) அவர்கள் மிம்பர் படிகளில் ஏறும்போது ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!! என்று கூறினார்கள். (வழமைக்கு மாறாக) இன்று ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், (கீழ்வருமாறு) பதில் கூறினார். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து கீழ்வரும் மூன்று விடயங்களைக் கூறினார்கள்.

1.யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்’ என்றார். அதற்கு நான் ‘ஆமீன்’ என்றேன்.

2.பின்னர், ‘யார் பெற்றோர் இருவரையும், அல்லது அவ்விருவரில் ஒருவரை அடைந்துகொண்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்வதன் மூலம் சுவர்க்கத்தை அடைந்து கொள்ளவில்லையோ அவரும் நாசமாகட்டும்’ என்றார். அதற்கு நான் ‘ஆமீன்’ என்றேன்.

3.‘உங்களுடைய பெயர் சொல்லக்கேட்டு, உங்கள் மீது யார் ஸலவாத்துச் சொல்லவில்லையோ அவரும் அழிந்து நாசமாகட்டும்’ என்றார். அதற்கும் ‘ஆமீன்’ என்றேன். நூல்கள்: திர்மிதீ: 3545, அஹ்மத்: 7444, இப்னு குஸைமா 1888, இப்னு ஹிப்பான்: 908

ஆகையால், இறைவன் நம் அனைவரையும் சபிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஆக்காமல், பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஆக்கி அருள வேண்டும். அதற்காக வரக்கூடிய புனித மிக்க ரமழான் மாதத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.