Wednesday, December 9, 2009

அல்லாஹ் உதவிகளை மறந்துவிடாதீர்கள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஆதமின் சந்ததிகளே!! அல்லாஹ் உதவிகளை மறந்துவிடாதீர்கள்


பிறப்பதற்கு முன்

நீங்கள் இந்த உலகில் பிறப்பதற்காக உங்களுக்காகவே ஆண், பெண் இருவரை நியமித்தான்! அவர்களை உங்களுக்காக திருமண உறவில் இணைத்தான் அவர்கள்தான் உங்கள் பெற்றொர்! ஆனால் நீங்கள் வாலிபம் அடைந்ததும் அவர் களையும் மறந்துவிடுகிறீர்கள் உங்கள் ரப்புல் ஆலமீனையும் மறந்துவிடுகிறீர்கள்? (அவ்லியாதான் உங்கள் பகவான்)


நீங்கள் கருவாகிய போது

உங்கள் தாயின் கருவரையில் நீங்கள் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தீர்கள் ஆனால் உங்கள் அருமைத் தாயோ கருவைச் சுமந்துக்கொண்டு பட்ட இன்னல்களை உணர்ந்த துண்டா? நாள்தோறும் ஒருவித உடல் மாற்றம், குடும்பத்தில் அவளின் வேலைப் பளுவினால் சில நேரம் தடுமாற்றம் இறுதியில் பிரசவ வேதனை அதில் அவள் மரணத்தை தொட்டு முத்தமிடுகிறாள் அல்லாஹ் உங்கள் தாய்க்கும் உங்களுக்கும் அழகிய மறுவாழ்வு கொடுக்கிறான் நீங்கள் அந்த தாயையும் அந்த ரஹ்மானை மறந்துவிடுகிறீர்கள்!


நீங்கள் வளரும் பருவத்தில்

என் மகன் வளர்ந்துவிட்டான் அவனுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்று எண்ணி உங்கள் தந்தை ஹலாலான முறையில் பணம் சம்பாதிக்க தம் சக்திக்கு உட்பட்டு மூட்டையாவது சுமந்திருப்பார் ஆனால் நீங்களோ பள்ளிக் கூடத்தில் அமர்ந்து சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பீர்கள்! தந்தையின் வேதனை அறிந்த தாயோ மகனுக்கு தெரிந்தால் படிக்கமாட்டான் என்று மறைத்திருப்பாள் ஆனால் நீங்கள் அறிந்தும் அறியாதது போல் இருந்திருப்பீர்கள்! அப்படியிருந்தும் அல்லாஹ் உங்க ளுக்கு கல்வி ஞானத்தை கொடுத்தான் அதையும் தூக்கி வீசிவிடுகிறீர்கள்!


இளமைப் பருவத்தில்

இப்போது உங்கள் தந்தை சற்று வசதியானவராக இருந்திருப்பார் அவரிடம் அன்புச் சண்டை போட்டிருப்பீர்கள் அதனால் தம் சொந்த விருப்பத்தை உதறித்தள்ளிவிட்டு பெற்ற மகனுக்காக மோட்டார் பைக் வாங்கி கொடுத்தி ருப்பார் அதை உணராமல் ஊர் சுற்றியிருப்பீர்கள்! அல்லாஹ் உங்கள் தந்தையின் உள்ளத்தில் உம்மீது பாசத்தை போட்டானே இது நினைவுக்கு வருகிறதா?

வாலிபப் பருவத்தில்

பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் ஒற்றுமையாக கூடி நின்று உங்களுக்கு மணமுடிக்க உதவியிருப்பார்கள் அது நினைவுக்கு வருகிறதா? மணப்பெண்ணும் தாய்வீட்டை மறந்துவிட்டு உங்களிடம் ஏதோ அடிமைப்
 போல வந்திருப்பாள்! உங்கள் வீட்டை அழங்கரித்து, உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி உங்கள் தாய் எவ்வாறு சிரமப்பட்டு உங்களை ஈன்றெடுத்தாலோ அது போன்ற சிரமத்தை அடைந்து உங்களுக்காக பேர் சொல்லும் அழகான வாரிசை பெற்றிருப்பாள் அதையும் மறந்திருப்பீர்கள்! உங்களுக்காக உங்கள் பெற்றோர், உடன் பிறந்தோர், மனைவி, உறவினர்கள் போன்றவர்களின் உள்ளங்களில் உங்கள் ரஹ்மான் அன்பை கொட்டுகிறானே அதுகூட நினைவிற்கு வரவில்லையா!


திடகாத்திரமாக வளர்ந்த பருவத்தில்

உங்களைச் சார்ந்தோர் உங்களுக்கு நல்அறிவை போதித்து வாழ்க்கைத் தேவைக்காக பொருளுதவி கொடுத்து வியாபாரத்தை மேற்கொள்ள வழிகாட்டியிருப்பார்கள் அதுவும் அல்லாஹ்வின் ரஹ்மத் இது உணரமுடிகிறதா?


வயோதிக பருவத்தில்

வாழ்ந்துவிட்டோம், வளர்ந்துவிட்டோம், உழைத்துவிட்டோம் இப்போது தள்ளாடக்கூடிய வயது அல்லாஹ் உங்களுக்காக அழகான மகனின் துணையை கொடுத்திருப்பான் அதன் மூலம் வயோதிகத்தில் ஒய்யாரமாய் நாற்காலியில் அமர்ந்து தினசரி நாளிதழை படிப்பீர்கள்! இதுவும் அல்லாஹ்வின் கருணை ஆனால் நீங்களோ என்னடா வாழக்கை என்று உதாசீணப்படுத்தி பேசுவீர்கள் நினைவுக்கு வருகிறதா?

மரணித்தவுடன்

உங்கள் மலக்குல் மவுத் அல்லாஹ்வின் கட்டளையுடன் உங்களை கைப்பற்றியிருப்பார்! பிறகு உங்கள் உற்றார் உறவினர்கள் உங்களை கபனிட்டு, நல்லடக்கம் செய்திருப் பார்கள், ஏகத்துவவாதியான உங்கள்
சாலிஹான பிள்ளைகள் அல்லாஹ்விடம் துவா கேட்டிருப்பார்கள் அதனால் அல்லாஹ் உங்களுக்கு தான் நாடினால் சற்று நிம்மதி அளிக்கலாம். அல்லாஹ்வின் இந்த உதவியைக் கூட நீங்கள் எண்ணிப்பார்ப்பது உண்டா?


• வாழும் போது துக்கம் வந்துவிட்டால் யா! கவுஸ்! என்றீர்களே!

• வாழக்கையில் நஷ்டம் வந்துவிட்டால் நாகூர் ஆண்டவரே என்கிறீர்களே!


• வேதனை வந்துவிட்டால் ஏர்வாடி இப்ராஹிம் ஷா என்கிறீர்களே!

• வருமை வாட்டினால் காஜா கரீப் நவாஸ் என்கிறீர்களே!

இவர்கள் உங்களுக்கு உதவியதுண்டா? உங்களிடம் அதற்கான அத்தாட்சிகள் உண்டா? மறுமையில் கேள்விக்கனைகளை அள்ளி வீசமாட்டானா? அல்லாஹ்வின் மீது பயம் இல்லையா? அல்லாஹ் கேள்வியே கேட்கமாட்டான் என்று எண்ணிக்கொண்டீர்களா?


நீங்கள் இறைநிராகரிப்பாளராக அல்லது கப்ரு வணங்கியாக இருந்தால் நாசமே! நாசமே! என அளருவீர்களே! அல்லாஹ் மன்னித்துவிடு என்று உளருவீர்களே! உலகில் இருக்கும் போது கிடைத்துக் கொண்டிருந்த அல்லாஹ்வின் மன்னிப்பும்! அல்லாஹ்வின் உதவியும் இப்போது உங்களுக்கு கிடைக்குமா? இல்லை! வாழும்போது அல்லாஹ்வின் உதவியை மறந்துவிட்டு அவனல்லாது மற்ற மற்ற வஸ்துக்களை வணங்கியிருப்பீர்களே அது கை கொடுக்குமா?

மரணிக்கும் வரை உங்கள் பெற்றோர் உங்களை நோக்கி இவன் என் பிள்ளை! என் உயிர் என்று கதறியிருப்பார்கள்!

வாழும்போது உங்களை உங்கள் மனைவி உங்களை நோக்கி இவர் என் கணவர் என்று உரிமையாக பேசியிருப்பார்!

பிரச்சினை வந்தால் உடன் பிறந்தவர்கள் உங்களை நோக்கி இவன் என் சகோதரன் என்று வரிந்துக்கட்டி உங்களுக்கு வக்காலத்து வாங்கியிருப்பார்கள்!

மரணிக்கும் போது உங்கள் மனைவியும், பிள்ளைகளும் நடுத்தெருவில் நின்றுக்கொண்டு எங்களை விட்டு பிரிகிறீரே என்று உள்ளத்தில் குமுறியிருப்பார்கள்!

இதையெல்லாம் கொடுத்தது யார்? உங்கள் இறைவன் ரஹ்மத்துல் ஆலமீன், ரப்புல் ஆலமீன் அல்லாஹ் இல்லையா? அப்படியிருக்க நீங்கள் உதவி தேடுவதோ சிலைகளிடமும் சிலுவையிடமும்! கப்ருகளில் உள்ள அவ்லியாக்களிடம்தானே! இவைகள் கைகொடுக்குமா?

இப்போதாவது எண்ணிப் பார்த்து ஒரு நல்ல முடிவுக்கு வரமாட்டீர்களா?

ஏகத்துவத்தை எட்டியாவது பார்க்கமாட்டீர்களா?

ஒருமுறையாவது ஈமானை சுவைக்கமாட்டீர்களா?

என் ஆதமின் சந்ததிகளே சற்று அல்லாஹ்வை நினைவுகூறுங்கள்! நீங்கள் திரும்புவது அவனிடம்தான்! நினைவிருகட்டும்

மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான். இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க் கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான் அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருக்குர்ஆன் 13:3)






அல்லாஹ்வுக்கும் எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான்.


(அல்குர்ஆன் 22:31)


நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் – அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில்


நுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)


அல்ஹம்துலில்லாஹ்

S.Gulam Thasthageer