“பிரார்த்தனையில் எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக! என்று கோருவோரும் மனிதர்களில் உண்டு, ஆனால், இ(த்தகைய)வருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை.” அல்குர்ஆன் 2:200.
“எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரங்களையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயல்களுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் பூரணமாக அவர்களுக்குக் கொடுத்திடுவோம், அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். (எனினும்) மறுமையிலோ, இத்தகையோருக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறோன்றுமில்லை, அவர்கள் செய்த யாவும் இங்கு அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே.” அல்குர்ஆன் 11: 15,16.
“எவன் மறுமையின் பயிரை விரும்புகிறானோ, அவனுடைய பயிரை(விளைச்சலை) நாம் அவனுக்காக அதிகப்படுத்துகிறோம். எவன் இம்மையின் பயிரை (மட்டும்) விரும்புகிறானோ, நாம் அவனுக்கு அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம். எனினும், அவனுக்கு மறுமையில் யாதொரு பங்குமில்லை.” அல்குர்அன் 42:20.
மேற்கண்ட வசனங்களை நன்றாக ஊன்றிக் கவனித்துப் பார்த்தால், ஒன்று நன்றாக விளங்குகிறது. இவ்வுலகத்தில் நல்ல வசதியுடனும், சகல சவுகரியங்களுடனும் வாழ வேண்டும் என்று கேட்பவருக்கு அவர் கேட்பவை இங்கேயே கொடுக்கப்பட்டு விடும் என்று தெளிவாக விளங்குகிறது. இவ்வுலக நன்மையை மட்டும் கேட்பவருக்கு, (தான் நாடியவருக்கு) “கொடுத்து விடுவேன்” என்று அல்லாஹ் திரும்பத் திரும்பக் கூறுவதால், இதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. வேறு எங்கெங்கோ, அலையோ அலை என்று அலைய வேண்டியதில்லை. நாகூர், அஜ்மீர், ஏர்வாடி என்று ஓட வேண்டியதில்லை. அல்லாஹ்விடமே, வேறு ஏஜன்சி (தரகர்) இன்றியே பெற்றுக் கொள்ளலாம். மேலும் மெளலிதுகள், ராத்திபுகள் என்று கத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
மேற்கண்ட அனாச்சாரங்கள் யாவும், இவ்வுலக நன்மையை வேண்டியே செய்யப்படுகின்றன. ஏதாவது ஒரு தீராத நோய் வந்துவிட்டால், நமது பாத்திஹா மெளலானாக்கள், ஏர்வாடியில் சென்று படு! என்று கூறுவதைத்தான் பார்க்கிறோம். விபரம் அறிந்தவர்கள் கூட, “அல்லாஹ்வே இவ்வுலக நன்மையை (மட்டும்) நாடுபவருக்கு, கொடுக்கிறேன் என்று அல்குர்ஆனில் கூறுகிறான்; எனவே, அல்லாஹ்விடமே கேள்” என்று கூறுவதை நாம் கொடுக்க முடிவதில்லை.
இந்த சூழ்நிலையில், இவ்வுலக நன்மையை நாடி அலையும் தர்ஹா கூட்டங்களையும், பாத்திஹா, மெளலிது, புர்தா, கூட்டங்களையும் பார்த்தவுடன், ஸஹாபாக்கள் ஞாபகம் வருகிறது. அவர்களை “ரலியல்லாஹு அன்ஹும்” – (அல்லாஹ் அவர்களைப் பொருத்திக் கொள்வானாக!) என்று துஆ செய்கிறோம். காரணம் என்ன? மந்திரத்தில் மாங்காயா? என்று மருக வேண்டியதில்லை. இஸ்லாத்தை முழுமையாகச் செயலில் காண்பித்தார்கள். நபி(ஸல்) அவர்கள்,அவர்களிடையே இருந்தபோதுகூட, மேலே சொல்லப்பட்ட திருவசனங்களுக்கும் பயந்து, நபி(ஸல்) அவர்களிடம் இவ்வுலக நன்மைக்காக மட்டும் துவாச் செய்யச் சொல்ல மிகவும் அஞ்சினார்கள். பின்வரும் நிகழ்ச்சியைக் கவனிக்கும் பொழுது இது நன்றாக நிரூபணம் ஆகிறது.
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அதாஃபின் அபிரபாஹ்(ரழி) அவர்களிடம், “நான் உங்களுக்கு ஒரு சுவர்க்கலோக பெண்மணியைக் காண்பிக்கவா?” – என்றார்கள். அவர் “ஆம்” என்றார். இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் ஒரு கருநிற பெண்ணைக் காண்பித்து, ” இப்பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் காக்காய் வலிப்பு நோயால் அவதிப்படுகிறேன், அப்பொழுது என் உடைகள் களைந்து உடல் வெளியில் தெரிந்து விடுகிறது என் நோய் குணமாக அல்லாஹ்விடம் துவாச் செய்யுங்கள் என்றார். நபி(ஸல்) நீ இந்த நோயை பொறுமையாக கசித்துக் கொண்டால், உனக்கு சுவர்க்கம் கிடைக்கும். அல்லது நீவிரும்பினால், உனது நோயைப் போக்கத் துவா செய்கிறேன்”, என்று கூறினார்கள். அதற்கு அப்பெண்பொறுமையுடன் தாங்கிக் கொள்கிறேன். ஆனால், அந் நோய் தாக்கும் பொழுது, எனது உடல், ஆடை விலகி , வெளியில் தெரியாமல் இருக்க துவாச் செய்யுங்கள், என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவ்வாறே துவாச் செய்தார்கள். அறிவிப்பவர் : அதாஃஇப்னு அபிராஹ்(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
ஆகவே, அப்பெண்மணி, மறுமையில் கிடைக்கப் போகும் அளவிலாப் பலன்களை நினைத்து, நபி(ஸல்) அவர்களிடம் தன் நோய் குணமாகத் துவாச் செய்யச் சொல்லவில்லை. கஷ்டத்துடன் தாங்கிக் கொண்டார். அல்லாஹுவும் தன் திருமறையில் “மறுமையில் வாழ்க்கைதான் மிக்க மேலானாதும் நிலையாதும் ஆகும்” என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 87: 17) என்பதில் அப்பெண் மனநிறைவு அடைந்தது கவனிக்கத்தக்கது.
ஆனால், இன்றோ ஒன்றையுமே செய்ய முடியாத, கபுருகளிடம் போய், நோய் தீர, உலக ஆதாயங்களுக்காக, நிற்பதைப் பார்க்கிறோம்.
இந்தச் சம்பவத்திலிருந்து, நாம் பெறும் படிப்பினை, உலகில் வறுமை, நோய், மற்றும் கஷ்டம் தீர, அல்லாஹ் அனுமதித்த வழிகளிலேயே முயற்சிகள் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட முறையான முயற்சிகளில் நமக்கு இவ்வுலகில் நமது விருப்பங்கள் நிறைவேறாவிட்டாலும், மறுமையில் அவற்றிற்கு பெரும் பேறுகள் கிட்டும் என்று அல்லாஹ் மீது உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டும்.
அல்லாஹ் அல்லாதவர்களிடம் முறையிடுவது கொண்டு, நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முயலுவது கூடாது. பொறுமையைக் கொள்ள வேண்டும் என்பதை மேற்படி குர்ஆன் வசனங்களும், ஹதீதும் நமக்கு வலியுறுத்துகின்றன.
S.Gulam thasthageer