ஸலாம் கூறுதல்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்று முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டு சிலர் ஸலாம் சொல்வதற்கு வெட்கப்படுவதைப் பார்க்கிறோம். ஸலாம் கூறுவதால் அவர்களுடைய அந்தஸ்து கெடுவதைப் போன்று நினைக்கிறார்கள். ஆனால் ஸலாம் கூறுதல் இஸ்லாத்தில் சிறந்த செயல் என்பதை அவர்கள் விளங்கவில்லை.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ''இஸ்லாத்தில் சிறந்தது எது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 12
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது ''(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது ''(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: திர்மிதீ 2613
S.Gulam Thasthageer